ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இருமுறை திறக்கப்படவில்லை எனவும், நவம்பர் 9ம் தேதி இந்த டெண்டர்கள் திறக்கப்படும் எனவும் மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மெரினாவை பொதுமக்களுக்கு திறப்பதை பொறுத்தவரை, தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவை திறப்பது உள்ளிட்டவை தொடர்பான நவம்பர் 11ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
Discussion about this post