“Project Pride” – திருநர்களுக்கான சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கேரளா!

திருநங்கை சமூகம் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டு சமுதாய அளவில் தனக்கான அங்கீகாரத்தினைப் பெற்று வருகிறார்கள். பொது சமூகத்தால் பலவிதங்களில் புறக்கணிப்பு செய்யப்படும் மற்றொரு சமூகம் திருநர் சமூகம். அவர்களுக்கு முறையான கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காத காரணத்தால், அவர்களது சமூக வாழ்க்கையும் கேள்விக்கு உரியதாக இருக்கிறது. இந்தச் சூழலில் ‘பிரைடு புராஜெக்ட் என்கிற பெயரில் திருநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தினை கேரள அரசானது அறிமுகம் செய்துள்ளது.

திருநர்களுக்கு ஆதரவான தீர்ப்பு…!

கேரள சமூக நீதித் துறையின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. திருநர்கள் சமூக ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களையும் பொருட்டு பல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதில் கேரளம் முன்னோடியாக உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்துக்கும் மத்திய அரசிற்கும் இடையே நடைபெற்ற திருநர்கள் உரிமைகள் குறித்த வழக்கில், திருநர்  உரிமைகள் குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளித்தது. சமூகத்தில் திருநர்கள் மோசமாக நடத்தப்பட்டு வருவதை இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் தங்களின் கவலையை தெரியப்படுத்தினர். ஆண், பெண் பால் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு மூன்றாம் பாலினமாக அவர்கள் இருப்பதை சமூகம் ஏற்காதது என்பது இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21 ஆகியவற்றை மீறும் செயலாகும் என்று அந்தத் தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டது.

திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!..

இந்தத் தீர்ப்புதான் திருநர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவிகரமாகவும் அவர்களின் சமூக மாற்றத்திற்கும் துணை நின்றது. திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, மத்திய மாநில அரசுகள் திருநர்களுக்கான திட்டங்களை வகுப்பதற்கு தூண்டுகோலாக இந்தத் தீர்ப்பு அமைந்தது. இதைத் தொடர்ந்து நாட்டில் முதன்முறையாகத் தமிழ்நாடு அரசு திருநர்கள் மேம்பாட்டு வாரியத்தை அமைத்தது. அதன் பிறகு கேரளம் உள்பட 11 மாநிலங்களில் இந்த வாரியமானது துவங்கப்பட்டது. இதில் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் திருநர்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டினை சிறப்பாக உருவாக்குவதிலும் கேரளம் முன்னணியில் இருக்கிறது.

கேரளத்தில் திருநர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் பல ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. ‘சாகல்யம்’ என்கிற பெயரில் திருநர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம், தொலைதூரக் கல்வி அளிப்பதற்கான ‘வர்ணம்’ திட்டம், ஸஃப்லம் தொழிற்கல்வி அளிக்கும் திட்டம், ‘யத்னம்’ என்கிற பெயரில் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம், சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் திருநர்களுக்கான உதவித் திட்டம் எனப் பல திட்டங்களைக் கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2018ல் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இரண்டு லட்சம் அளிக்கும் திட்டத்தை அறிவித்து, கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தச் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ உதவியாக மாதம் தலா மூவாயிரம் என 12 மாதங்களுக்கு வழங்கும் திட்டமும் அம்மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கேரள அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள “பிரைடு புராஜெக்ட்” திருநர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை அளிக்கக்கூடியது. இதன் மூலம் தங்களாலும் சமூக ரீதியில் முன்னேற முடியும் மற்றும் பொருளாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். சாதி, மதம், பாலினம் சார்ந்து நாம் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு  மனிதர்களையும் நேசிக்கும் தன்மையை பெருக்கிக்கொள்ள வேண்டும். அதுவே பாலின சமத்துவத்தின் அடிப்படை. கேரளா போன்று மற்ற மாநில அரசுகளும் திருநர் சார்ந்த நலத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

Exit mobile version