அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் மாணவர்களிடையேயான சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகளை களையவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
பள்ளி செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மதிய உணவு வழங்கும் திட்டம், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மாணவர்களுக்கான எழுது பொருள்கள் உள்ளிட்டவைகளும் பருவத்தின் தொடக்க காலத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
கணினி சார்ந்த அறிவை பெருக்கும் விதமாக அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி 2011-12ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எந்த வித சிரமும் இன்றி பயணம் மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது, அதுமட்டுமின்றி அரசு சார்பில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலூம் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்க்கு விபத்து, எதிர்பாராத மரணம், அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலும் அவர்களின் குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் பள்ளி சார் செயல்பாடுகளின் போது எதிர்பாராமல் நிகழும் விபத்தினால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் விதமாக, புதிய திட்டம் ஒன்று இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் நலனுக்காக பல்வேறு வகையான நலத்திட்டங்கள் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post