தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது எப்போது?

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவுவதாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

காத்திருக்கும் தனியார் பள்ளிகள்..!

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையில், என்னென்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்து வருகிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் அளிக்கும் கட்டணம் மாறுபாடு குறித்த மனு மீது உரிய விசாரணை நடத்தி அதன்படி கல்வி கட்டணங்கள் நிர்ணயித்து உத்தரவுகள் பிறப்பிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் கடந்த ஆண்டுடன் கட்டணம் நிர்ணயக் குழு அளித்த கட்டணம் விவரம் காலாவதியான நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க விண்ணப்பித்து தனியார் பள்ளிகள் காத்திருக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள்…!

அதிமுக ஆட்சியில் கொரோனோ பேரிடர் என்பதால் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளித்த உயர்நீதிமன்றம் 75 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனையும் 40 சதவீதம் மற்றும் 35 சதவீதம் என்று தவணையாக வசூலிக்க வேண்டும் என்று கூறியது. பிறகு 2021-2022 கல்வியாண்டில் உச்சநீதிமன்றமானது தனியார் பள்ளிகள் 85 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறியது. மேலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உரிய நேரத்தில் இந்த கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால் அவர்களின் படிப்பை பாதிக்கும் நோக்கில் எந்த செயலையும் பள்ளிகள் செய்துவிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படி கடந்த கல்வியாண்டுகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிப்பது எப்போது?

ஆனால் 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் ஒரு மாதமாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரையில் தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்காமல் இருப்பதாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் வேதனை தெரிவித்துள்ளது. கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே தமிழக அரசின் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்தால்தான் பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் எவ்ளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும், எவ்வளவு கட்டணத்தை எந்தெந்த வகுப்புகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது என்று பெற்றோரும் குழப்பம் இல்லாமல் கட்டணத்தை செலுத்த முடியும். ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மெத்தனத்தாலும், கல்வி கட்டண நிர்ணய குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்காமல் இருப்பதாலும், தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பதாக தனியார் பள்ளிகளுக்கான கூட்டு இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே அரசுப் பள்ளிகளை திறம்பட கவனிக்க முடியாமல் திணறும் அரசாக திமுக அரசு செயல்பட்டுகொண்டிருக்கிறது. இதனால் ஏழை மற்றும் பாமரக் குழந்தைகளின் பள்ளிப்படிப்புதான் மிகவும் கவலைக்கிடம் ஆகியுள்ளது என்று கல்வியாளர்கள் கூறிவருகின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறையை எப்போது கைகொண்டாரோ அப்போது இருந்து கல்வித்துறை ரீதியிலான பல்வேறு குற்றச்சாட்டுகளும் குளறுபடிகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் பாதிக்கப்படப் போவது கல்விக் கற்க வந்திருக்கும் பிள்ளைச் செல்வங்களே!

Exit mobile version