கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவடைந்து வரும் நிலையில்,பன்னாட்டு மற்றும் உள்நாட்டு எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய மோடி, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருவதாக கூறினார். கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியா எதிர்கொண்டு வரும் சவால்களையும், சங்கடங்களையும் சந்தித்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், அது சர்வதேச பொருளாதாரச் சூழலையும் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவைப் பொருத்தவரை அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதன் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, உள்நாட்டு செலாவணியை பாதிக்காத வகையில் அதில் சில விதிகளை எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.