தமிழகத்தின் தலைநகர் சென்னையில், குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்….
தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்கும் சென்னையில், பணி நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு, அதிகளவில் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, குடிநீர் தேவையும் சென்னையில் அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக சென்னை மக்களின் ஒரு நாளைக்கு 83 கோடி லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதற்காக பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே 6 லட்சத்து 73 ஆயிரத்து குடிநீர் இணைப்புகள் மூலமும், இதுதவிர 24 ஆயிரத்து 712க்கும் அதிகமான தெருக்குழாய்கள் மூலமாகவும் சென்னை நகருக்கு குடிநீர் வழக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கவில்லை. இதனால், சென்னை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டது.
அதனடிப்படையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி மற்றும் மீஞ்சூர் இருந்து சென்னைக்கு ஒருநாளைக்கு தலா 100 மில்லியன் லிட்டர் நீர் கொண்டுவரப்படுகிறது.மேலும், கல்குவாரியில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து, மக்களின் தேவைக்கு பயன்படுத்தலாமா என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் நீரை பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது.
இதையடுத்து, குன்றத்தூரை அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் உள்ள 25 கல்குவாரிகளில் இருந்து, 200 மில்லியன் கன அடி நீர் தேக்கிவைக்கப்பட்டு, இந்த நீரை செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ராட்சத குழாய்கள் மற்றும் மிதவை இயந்திரம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு நீர் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் ஒருநாளைக்கு 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு 55 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நீர் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அனகாபுத்தூர், குன்றத்தூர், சிக்கராயபுரம் திரிசூலம், உள்ளிட்ட கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து, சென்னை மக்களுக்கு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக அரசு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து லாரிகளில் சென்னைக்கு நீர் கொண்டுவரும் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது.
Discussion about this post