சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
நிவர் புயல் காரணமாக மழைநீர் தேங்கிய சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி, ஒக்கியமேடு, முட்டுக்காடு ஆகிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளையும், சீரமைப்பு பணிகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதலமைச்சர், வடிகால் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடியிருப்புகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பள்ளிக்கரணையை தொடர்ந்து ஒக்கியமேடு பகுதியை பார்வையிட்ட முதலமைச்சர், அங்கு மழைநீர் கடலில் சென்று கலக்கும் பாதையை ஆய்வு செய்தார். தொடர்ந்து, முட்டுக்காடு முகத்துவாரப் பகுதியிலும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்யப்பட்டு வருவதாக கூறினார். செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பள்ளிக்கரணை மத்திய பகுதியில் கால்வாய் அமைத்தால் மழைநீர் தேங்காது என்றும் கூறினார்.