சபரிமலை விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கேரள சட்டப்பேரவை கூட்டம் பத்து தினங்களாக நடைபெற்று வருகிறது. சபரிமலை விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், சட்டப்பேரவை இன்று கூடிய சிறிது நேரத்தில் எதிர்கட்சிகள் இணைந்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 144 தடையுத்தரவை விலக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் முடங்கியுள்ளதாக ஆளுங்கட்சி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.