மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கியது.
மதுரையின் நகரப்பகுதிகளில் இருக்கக்கூடிய மீனாட்சி கலைக்கல்லூரியின் கலையரங்க வளாகத்தில், மதுரையில் இருக்கக்கூடிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றக்கூடிய 2 ஆயிரத்து 935 காவலர்கள், தங்கள் வாக்குகளை பதிய ஏற்பாடு செய்யப்பட்டு, காலை 9 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரையில், மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய தொகுதி மற்றும் மேலூர் தொகுதி என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் ஈடுபடுத்தப்படுவதால், தேர்தலுக்கு முன்பாகவே அவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு, கோவை அவிநாசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற தொகுதியில், 980 காவலர்களும், 212 ஊர்காவல் படையினரும் என மொத்தம் ஆயிரத்து 205 பேருக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.
Discussion about this post