கன்னியாகுமரியிலிருந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, கோவை, மதுரை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழகம், புதுவை, கேரளா மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழையிலிருந்து மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவுக்கு அருகே அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் இது வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால் கேரளாவில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.