நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8.5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என்று அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கவேண்டும் என இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான அசோசெம் வலியுறுத்தியுள்ளது.
மத்தியில் அமையவுள்ள புதிய அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய திட்டங்களை பட்டியலிட்டு அறிக்கை ஒன்றை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஆண்டுக்கு 8.5 சதவீதமாக உயர்த்தி 2025ம் ஆண்டில் 350 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
விவசாயிகள் வருவாயை அதிகரிக்க, வேளாண் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றின் குத்தகை அடிப்படையிலான சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கவேண்டும் என்றும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வருமான வரியை குறைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் கல்விச் சேவைகளுக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவேண்டும் என்று அசோசெம் வலியுறுத்தி உள்ளது.