பொதுவாக, காவல் நிலையங்களுக்கு வருபவர்கள், சுவர்களில், வான்டட் என்று கைதிகளின் படங்கள் தொங்குவதை பார்க்கலாம். ஆனால், சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், சுவர் முழுவதும் திருக்குறள் எழுதப்பட்டிருப்பதை காணலாம்.
பெரும்பாலான காவல் நிலையங்கள் புகார் கொடுக்க வருவோருக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்தும் நிலையில், இதற்கு விதிவிலக்காக செயல்பட்டு வருகிறது வடபழனி காவல் நிலையம். உள்ளே நுழையும்போது, இன்முகத்துடன் வரவேற்று உதவும் பெண் காவலர்கள், சீராக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வழக்குகளின் கோப்புகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்தமான கழிவறை என காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது வடபழனி காவல் நிலையம்.
வடபழனி ஆய்வாளராக சந்துரு பொறுப்பேற்ற பிறகு, காவல் நிலையத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தினார். ஐ.எஸ்.ஓ தரச்சான்றுக்கு விண்ணப்பித்து, நேரில் வந்து ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ அதிகாரிகள், சீர் மிகு காவல் நிலையம் என தரச்சான்று வழங்கியுள்ளனர்.
காவல் நிலையம் முழுவதும் விளக்கத்துடன் எழுதி வைக்கப்பட்டுள்ள திருக்குறளாலேயே, வடபழனி காவல் நிலையம் மற்றவைகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. குழந்தைகளுடன் காவல் நிலையம் வருபவர்களுக்கு வசதியாக, குழந்தைகள் பராமரிப்பு அறையும், சிறு விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் பணியின் காரணமாக சோர்வுறும் காவலர்கள் ஓய்வு எடுக்க அறையும், ஓய்வு நேரத்தில் விளையாடி ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்ள இறகு பந்து மைதானமும் என, பல்வேறு வசதிகளையும் கொண்டுள்ளது இந்த காவல் நிலையம். காவல் நிலையங்களை சீர்தூக்க வேண்டும் என்ற சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் உத்தரவை ஏற்று, இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காவல் நிலையங்கள் இத்தகைய மாற்றங்களை கண்டால், நிச்சயம் பொதுமக்களிடம் நன்மதிப்பு கூடும், சீர் மிகு காவல் துறை என பெயர் பெரும் என்பதே நிதர்சனம்..
Discussion about this post