சென்னையில், கடத்தப்பட்ட சிறுமியை 10 மணி நேரத்தில் மீட்டு, சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த, அருள்ராஜ், நந்தினி தம்பதியின் 3 வயது மகள் அன்விகா. இருவரும் பணிக்கு செல்வதால் குழந்தையை பராமரிக்க அம்பிகா என்ற பணிப்பெண்ணை நியமித்திருந்தனர். இந்நிலையில், பள்ளியிலிருந்து திரும்பிய சிறுமியை அழைத்துவரச் சென்ற பணிப்பெண், சிறுமியுடன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார், கணவரிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் மகளையும், பணிப்பெண்ணையும் கடத்திவிட்டதாகவும் ரூபாய் 60 இலட்சம் பணம் கேட்டும், மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பெற்றோர் புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், பணிப்பெண்ணே கடத்தலில் ஈடுபட்டதை கண்டறிந்து, அம்பிகா மற்றும் முகமது கலிமுல்லா ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறுமியை கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.