தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆசிரியரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏரல் அருகே உள்ள குப்பாபுரத்தை சேர்ந்த ஆசிரியர் சாலமோனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட 4 பேர் டெம்போ வேனில் கடத்தியுள்ளனர்.
சென்னை ஆற்காடு சாலையில் உள்ள நிதி நிறுவன உரிமையாளர் சிவகுமார் நாயரிடம், சாலமோன் தம்பி தேவராஜ் வாங்கிய 21 லட்சத்தை வசூலிப்பதற்காக கடத்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ள சகோதரியின் கணவர் மூலம் போலீசாருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், சிவக்குமார் நாயருக்கு 3 லட்சம் ரூபாயையும் கொடுத்து தப்பி வந்துள்ளார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையம், மாவட்ட எஸ்பி, டிஜஜி ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், வளசரவாக்கம் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.