உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பரங்கிமலை காவல் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
கிண்டி கத்திபாரா முதல் போரூர் வரை 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 121 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் 8 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அதிகம் அமைந்துள்ள கிண்டி முதல் போரூர் வரையிலான சாலையில் போக்குவரத்தை சரி செய்யவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் சிசிவிடி கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்த பிறகு பேசிய மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மெரினாவில் பலூன் விற்கும் ஏழை தம்பதியின் 7 மாத குழந்தை காணாமல் போனதாகவும், அந்த குழந்தையை உடனடியாக கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருந்ததாகவும் கூறினார்.
சென்னையில் குற்ற சம்பவங்கள் தற்போது பெரும் அளவில் குறைந்துள்ளதாகவும், செயின் பறிப்பு சம்பவம் பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். குற்றச் சம்பவங்களை குறைக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த அறிவுரையும், ஆலோசனைகளையும் வழங்கியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.