கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய நபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கோழிகளுக்கு கொரோனோ பாதிப்பு உள்ளது என்றும், இது மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே யாரும் கோழிக்கறி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் என வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல் கடந்த மாதம் பரவியது.
இதனால் முட்டை மற்றும் கறிக்கோழி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இது தொடர்பான புகாரின் பேரில், நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கரூர் மாவட்டம் தென்னிலையை சேர்ந்த பெரியசாமி என்பவர், அவருடைய வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து, இந்த பொய்யான தகவலை பல்வேறு சமூக ஊடகங்களில் பரப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post