நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தொடர்ந்து எதிர்த்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது அந்த கொள்கையில் இருந்து விலகியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர்கள் அரசியலில் கால் பதிப்பதை கடுமையாக எதிர்த்து வந்தார். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது நடிகர்கள், அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய போதும், அதற்கு எதிப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டார்.
வயதான காரணத்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பிழந்த நடிகர்கள், அரசியல் களத்தை நோக்கி திரும்புவதாக ராமதாஸ் பேசி வந்தார்.
ஆனால் சமீப காலமாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த தனது கொள்கையில் இருந்து பாமக பின்வாங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு காவிரி பிரச்சினைக்காக நடிகர் கமல்ஹாசன் அனைத்து கட்சிகளை கூட்ட முயன்ற போது முதல் கட்சியாக பாமக கலந்து கொண்டது.
இந்த நிலையில் கடந்த ஜூலை 23-ம் தேதி பிரபல துணை நடிகர் ரஞ்சித் பாமகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு கட்சித் துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இதனிடையே நடிகர்கள் தங்கள் கட்சியில் சேர்வதற்கு எந்த தடையும் இல்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் பாமக தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.