பிஎம்.நரேந்திர மோடி திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாலிவுட் இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ள படம் பிஎம். நரேந்திர மோடி. மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஏப்ரல் 5ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். மக்களை திசை திருப்பும் நோக்கில் திட்டமிட்டு இந்த திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிடுவதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. பிறகு தயாரிப்பாளர் தரப்பில் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் ஐந்திலிருந்து பன்னிரெண்டாக மாற்றபட்டது. அதன் பிறகு மோடியின் பயோபிக் படத்தை தேர்தல் முடியும்வரை வெளியிட அனுமதியளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது தலைவரின் வாழ்க்கை படமாக வெளியாகுவது வாக்களர்களின் மனநிலையை மாற்றும் எனக் குறிப்பிட்டு, அதனால் இத்திரைப்படத்தை மின்னணு ஊடகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதிவரை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் ஏற்பு தெரிவித்துள்ளது.