நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு

நோபல் பரிசு பெறும் பொருளியலாளர் அபிஜித் பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பொருளாதாரத் துறையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரிமெர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு பற்றிய ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் வாழ்ந்துவரும் அபிஜித் பானர்ஜி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். தனக்கு விருது அறிவிக்கப்பட்ட பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ள அபிஜித் பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு மிகச் சிறந்த சந்திப்பு எனப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆரோக்கியமான, விரிவான விவாதம் நடத்தியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மனித குல மேம்பாட்டில் அவருக்கு உள்ள அக்கறையை இந்தச் சந்திப்பின்போது தான் கண்டுணர்ந்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். அபிஜித் பானர்ஜியின் எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள அபிஜித் பானர்ஜி கல்கத்தா, டெல்லி ஜவகர்லால் நேரு, ஹார்வர்டு ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version