கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை நடைபாதை அமைக்க திட்டம்

சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை,  லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை  அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீணடும் விசாரணைக்கு வந்தது.
 
 சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை  வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால், கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை  லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மாநகராட்சி கொடுத்துள்ள விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்படவுள்ள புதிய கடைகளில்  பிளாஸ்டிக் பயன்பாடு கண்டிப்புடன் தவிர்க்கப்பட வேண்டுமெனவும், அதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.
 
கடைகள் வடிவமைப்பு மற்றும் எத்தனை கடைகளுக்கு அனுமதி ஆகியவை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Exit mobile version