”ஏழு கழுத வயசாயிருச்சு, இன்னும் வேலைக்கு போகாம இருக்கியே டா” என்று நம் பெற்றோர்கள் நம்மளை நோக்கி வசவுகளை தொடுத்திருப்பர். அந்த தரிசனம் நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும். நமக்கே இப்படி இருக்க 11 வயது சிறுமி ஒரு பொம்மை நிறுவனத்திற்கே சி.இ.ஓ-வாக இருந்துள்ளார். இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அந்தப் பதவியை தற்போது துறந்துள்ளார். யார் அந்த சிறுமி?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிக்சி குர்திஸ் தான் அந்த சிறுமி. 11 வயதான இச்சிறுமி கொரோனா பெருந்தொற்று இந்த உலகை அச்ச மூட்டிக்கொண்டிருந்த சமயத்தில் 2021 ஆம் ஆண்டு தனது தாய் ராக்சி ஜாசென்கோவுடன் இணைந்து பிக்சி பிட்ஜெட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் தலைமைச் செயல் அதிகாரியாக பிக்சி தற்போது வரை இருந்து வந்தார். குழந்தைகளுக்கான பொம்மைகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தின் மாதாந்திர வருமானம் சுமார் ஒரு கோடி ஆகும். இந்த நிலையில் தன்னுடைய படிப்பிற்காக இந்த சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். மேலும் பிக்சியை படிப்பில் கவனத்தை செலுத்துமாறு அவருடைய தாய் அறிவுரையும் கூறியுள்ளார்.
பிக்சி தன்னுடைய 12 வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில்தான் தன்னுடைய ஓய்வு குறித்து அறிவிக்க உள்ளார். பிறகு படிப்பில் முழுகவனத்தை செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பிக்சியை 1.3 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். இவர் அடிக்கடி தனது சொகுசு வாழ்க்கை குறித்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்வார். இதனடையே தனது பிறந்தநாளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு வழங்க உள்ள பரிசு தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த பரிசு பையில் 4000 ரூபாய் மதிப்புள்ள ஆஸ்திரேலிய அழகுசாதன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசு பைகளை ஆஸ்திரேலியாவின் அழகுசாதன நிறுவனமான மெக்கோபியூட்டி வழங்கி இருக்கிறது. இந்த வீடியோவை பலரும் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
12 வயது சிறுமிக்குள் இவ்வளவு திறமையா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள். சாதிப்பதற்கு வயது ஏது? சாதிப்பதற்கு ஆர்வமும் உழைப்பும் மட்டுமே போதுமானது. அதனை பிக்சி எனும் இச்சிறுமி நமக்கு சொல்லாமல் சொல்கிறார்.