பன்றிக் கொழுப்பில் எரிபொருள்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

இறந்து போன பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழியிலிருந்து கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளின் கொழுப்பு தேவையற்ற பொருளாகக் கருதப்படுகிறது. இந்தக் கொழுப்பைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளைத் தயாரிக்கும்போது மிகக் குறைந்த அளவிலான கரிம வாயு மட்டுமே வெளியாகிறது. விலங்கு கொழுப்பைப் பயன்படுத்தி மெழுகுவர்த்தி, சோப், வாசனைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த 20 வருடங்களாக விலங்குக் கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட பயோடீசல் (BioDiesel) பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜெட்களுக்காக விலங்கு கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் எரிபொருள் மீது பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன. விமானப் போக்குவரத்துத் துறையில் விலங்கு கொழுப்பினால் தயாரிக்கப்படும் எரிபொருளைப் பயன்படுத்தும்போது, அந்த எரிபொருள் சாலைப் போக்குவரத்தில் இருந்து ஆகாயவழிப் போக்குவரத்துக்கு மாறும் என்பது கவலையளிக்கும் விஷயம் என உயிரி எரிபொருள் தயாரிப்புத் துறை நிபுணர்கள் கூறுகின்றன.பாரிஸிலிருந்து நியூயார்க்கிற்கு செல்லும் விமானம் ஒன்றுக்கு 8 ஆயிரத்து 800 இறந்த பன்றிகளின் கொழுப்பு தேவைப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் எனக் கருதப்படும் நிலையில், விமானப் போக்குவரத்துக்கு இந்த எரிபொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற தொழில்துறைகளுக்குத் தேவையான கொழுப்பு கிடைக்காது என்பதால் அத்துறைகளில் பனை எண்ணெய் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்றும், இது கரிம வெளியேற்றத்தைப் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

– பாலாஜி, செய்தியாளர்

Exit mobile version