முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாருமான ஜெயக்குமார் அவர்கள் தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பிரத்யேகப் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அவர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நேற்றையத் தினம் ஓபிஎஸ் தரப்பினர் அளித்த பேட்டிகள் விரக்தியின் உச்சத்தில் அளித்த பேட்டியாகத்தான் பார்க்கிறேன். பிக்பாக்கெட் என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பது மிகவும் தவறானது. உண்மையான பிக்பாக்கெட் பன்னீர்தான். அதிமுக அலுவலகத்தை துரோகிகளோடு தீயசக்திகளோடு வந்து அடித்து நொறுக்கியது போன்ற செயல்களில் ஈடுபட்டது அவரது தரப்புதான். ஒன்றரைக்கோடி தொண்டர்களின் கோயிலான அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்தவர் அவர். அதனடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இருந்த வீட்டு வசதித்துறையினை பன்னீர்செல்வம் கைப்பற்றினார். இத்தகவலை அன்றைக்கு உடுமலை இராதாகிருஷ்ணன் அவர்களே சொல்லியுள்ளார். இது பிக்பாக்கெட் அடிக்கும் செயல் இல்லையா என்ன?. மேலும் அம்மாவின் அரசை கவிழ்க்க நினைத்தவர் பன்னீர். திமுக கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஒத்து ஊதி அதனை செயல்படுத்தியவர் பன்னீர். ஆனால் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சொன்னதற்காக கட்சியைக் காப்பாற்றுவதற்காக அவரை மீண்டும் கட்சியில் இணைத்தோம். பிறகு பன்னீர்செல்வம் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் உண்டு என்றும் சசிகலா தரப்பிடம் விசாரனை நடத்த வேண்டும் என்று கேட்டார். அதற்காக எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார். பிறகு அம்மா அவர்களின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்றும் சசிகலாவை எனக்கு தனிப்பட்ட விதத்தில் பிடிக்கும் என்றும் பன்னீர் மாற்றி மாற்றி பேசினார்.
அதற்கு பிறகு ஒரு மினி தேர்தலாக இடைத்தேர்தல் நடைபெற்றது. அதாவது 22 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அன்றைக்கு ஆட்சியை தக்க வைக்க 9 முதல் 10 தொகுதிவரை தேவைப்பட்டது. நாங்கள் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை மீட்டெடுத்தோம். அதில் பெரியகுளமும் ஆண்டிப்பட்டியும் பன்னீரின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. ஆனால் வேண்டுமென்ற அந்தத் தேர்தலில் அதிமுகவினரை தோற்கடிக்க காரணமாகியிருந்தார். ஆனால் மக்களவைத் தேர்தலில் தனது மகனுக்காக கோடிகள் செலவு செய்து வெற்றி பெற வைத்தார். சொந்தமகன் தான் முக்கியம் கட்சி முக்கியம் இல்லை என்று செயல்பட்டார் பன்னீர். அதேபொல கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட தேனியில் அவர் மட்டும் தனது தொகுதியில் வெற்றிபெற்று மற்றவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தார். எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்பதற்காகவும் கட்சியை அவர் தலைமையில் செல்ல விடக்கூடாது என்பதற்காகவும் பல தீமைகளை செய்தவர்தான் பன்னீர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்க:ள் பேசினார்.