தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அம்பத்தூர் மின்மயானத்தில், மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் லட்சுமி நாரயணன் ரெட்டி. இவர் காய்ச்சல் காரணமாக சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்த நிலையில், அவரது உடலை அம்பத்தூர் அயப்பாக்கம் சாலையில் உள்ள மின்மயானத்தில் மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. முகக் கவசங்களுடன் வந்த மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்ற உடலைக் கண்டு அச்சமடைந்த மின்மயான ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த பொதுமக்கள், உடனடியாக லட்சுமியின் சடலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அம்பத்தூர் காவல்துறையினர், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மருத்துவர் சாதாரண காய்ச்சலுக்கு உயிரிழந்தாரா அல்லது கொரோனா தொற்றால் உயிரிழந்தாரா என்பது விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது.
Discussion about this post