தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவிதொகையை, 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஸ்டாலின், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் பழநியில், மாற்றுத் திறனாளிகள் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், வாக்குறுதியை வழங்காத திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், திமுக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.