பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைக்கிறேன் பேர்வழி என, போஸ் கொடுத்தே மாணவர்களை பாடாய்படுத்தி எடுத்துவிட்டார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். முதல்வர், அமைச்சர் என விடியா ஆட்சியில் அனைவரும் வெறும் “போஸ் பாண்டிகளாய்” இருப்பதாக பொதுமக்கள் எள்ளி நகையாடுகின்றனர்…
ஒரு போட்டோ எடுப்பதற்காக மாணவர்களை தட்டில் உணவுடன் காக்க வைத்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…
அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என ஒன்றைத் துவக்கிவிட்டு, அதை வைத்து விளம்பரம் தேடி வருகிறது. திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின், தரையில் அமர்ந்து மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிடுவதுபோல போட்டோ, வீடியோ ஷூட் எடுத்து அதை காணும் இடமெல்லாம் விளம்பரம் செய்து வருகிறது விடியா அரசு.
இதைக் கண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கும், ஸ்டாலினைப் போல ஆசை துளிர்விட்டதுபோல. உடனே, தனது குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்டாலின் துவக்கி வைத்த காலை உணவுத் திட்டத்தை மீண்டும் துவக்கி வைக்க ஏற்பாடுகளை செய்தார்.
இதற்காக காலையில் வழக்கத்தை விட சீக்கிரமாகவே மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, மேஜை போடப்பட்டு உணவு பறிமாறப்பட்டது. பக்கத்திலேயே திரை அமைக்கப்பட்டு அதில் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்த வீடியோ வேறு ஒளிபரப்பப்பட்டது. காலையில் தூக்கக் கலக்கத்தில் அமர்ந்திருந்த இளம் பிஞ்சுகள் நடப்பது என்னவென தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தனர்.
சாப்பாடு பரிமாறப்பட்டதும், பன்னீர்செல்வம் தனது தட்டில் இருந்த உணவை எடுத்து அருகில் இருந்த மாணவர்கள் வாயில் ஊட்டி விடுவது போல போஸ் கொடுக்கத் தொடங்கினார். உடனே அதிகாரிகள் அனைவரும் தங்களது செல்போன்களில் அமைச்சரைப் படம் பிடித்து நற்பெயர் எடுக்கத் துடியாய் துடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து அதிகாரி ஒருவர் குறுக்கே கடந்து செல்ல, நல்ல ஷாட் மிஸ் ஆயிருச்சே என கடுப்பான அமைச்சர், கையை நீட்டி ஏய் என அதிகாரியை ஒரு சவுண்ட் விட்டார். அப்பாவி மாணவர்களோ என்ன நடக்கிறது எனத் தெரியாமல் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அமைச்சரின் இந்த போலி போட்டோஷூட் வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.