ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தனது தந்தையை கவனித்து கொள்ள பரோல் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை நீதிமன்றம் ஏற்றதையடுத்து ஒரு மாதம் பரோலில் அவர் கடந்த 12 ஆம் தேதி வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளிவந்த அவர் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தாருடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் திருமணம் கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. திருமண விழாவில் பங்கேற்க, சுமார் 20 போலீஸாரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் கிருஷ்ணகிரிக்கு வந்தார். இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி, வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் தனது தந்தையை கவனித்துக் கொள்ள பரோலை நீட்டிக்கும்படி பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட சிறைத்துறை பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாதத்திற்கு பரோலை நீட்டித்து உத்தரவிட்டது.