ரெம்டெசிவிர் மருந்தை வாங்க அலை மோதும் கூட்டத்தை கட்டுப்படுத்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த விற்பனை மையத்தை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றியும் எந்த பயனும் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக இருக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாளுக்கு நாள் தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
தட்டுப்பாட்டை போக்க சென்னை கீழ்பாக்கம் அரசு மருந்துவமனையில் மையம் அமைத்து ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது.
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்க நாள் கணக்கில் காத்திரும் மருந்தை வாங்கு நிலை ஏற்பட்டது.
வெளிமாவட்டங்களில் இருந்து நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் வந்து மருந்தை வாங்க இரவு பகலாக காத்திருந்து மருந்தை வாங்கிச் சென்றனர்.
இதனையடுத்து தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மருந்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனாலும் கூட்டம் முண்டியடித்தால் அரசு மருத்துவமனைகளில் இருந்து வேறு இடத்துக்கு விற்பனை மையத்தை மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த விற்பனை மையம் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்க நேற்று இரவு முதலே நேரு உள்விளையாட்டு அரங்கின் வாயிலில் ஏராளமோனோர் திரண்டனர்.
ஆனால் முண்டியடித்தை கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காலை சுமார் 9 மணி அளவில் மருந்து விற்பனை மையம் திறக்கப்பட்ட உடன் அலைமோதிக் கொண்டிருந்த கூட்டத்தினர் மருந்தை வாங்க முண்டியடித்து ஓடிச்சென்றனர்.
அங்கிருந்த காவல்துறையினரால் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முடியவில்லை.
ஊரடங்கிற்கு பின்னரும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், மருந்து தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
எங்கே தங்களுக்கு மருந்து கிடைக்காமல், போய்விடுமோ என்ற ஏக்கத்தில் வரும் மக்களுக்கு மருந்தை வாங்க அரசு விதித்து இருக்கும் கட்டுப்பாடு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரெம்டெசிவிர் மருந்தை மருத்துமனைகளுக்கு கொடுக்காமல் நேரடியாக பொதுமக்களுக்கு கொடுப்பதால் தான் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு ஆகும்.
கொரோனா நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்த உறவினர்களே நோயாளியாகும் நிலையே நேரு உள்விளையாட்டு அரங்கில் காணப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் காத்திருந்த நிலையில் ஒரு சிலருக்கு மட்டுமே மருந்து கிடைத்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Discussion about this post