ரெம்டெசிவிர் மருந்து கேட்டு, மக்கள் அரசுக்கு தொல்லை கொடுப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளது, மக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, உயிர் காக்கும் மருந்தாக இருக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கு, நாளுக்கு நாள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தட்டுப்பாட்டை போக்க, சென்னை கீழ்பாக்கம் அரசு மருந்துவமனையில் மையம் அமைத்து, ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரிக்க, நாள் கணக்கில் காத்திருந்து மருந்தை வாங்கும் நிலை ஏற்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் வந்து, மருந்தை வாங்க இரவு பகலாக காத்திருந்து மருந்தை வாங்கிச் சென்றனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்த விற்பனை மையம், நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டது. அங்கும் கூட்டம் முண்டியடித்த நிலையில், கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, அந்ததந்த மருத்துவமனைகள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்குவதற்காக, மக்கள் தற்போதும் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். பலரும் இரவு பகலாக வரிசையில் காத்திருக்கும் நிலையில், ஒருசிலருக்கு மட்டும் மருந்துகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரெம்டெசிவிர் மருந்து கேட்டு மக்கள் அரசுக்கு தொல்லைக்கொடுத்து வருவதாகவும், அவர்களால் அரசுக்கு தொல்லைதான் எனவும் அலட்சியமாக பதிலளித்தார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், போதிய படுக்கை வசதிகள் இல்லாததாலும், கொரோனா நோயாளிகள் ஒரு புறம் இறந்து வரும் நிலையில், தொற்று ஏற்படும் அபாயத்தோடு, ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க காத்திருக்கும் மக்களை, தொல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சித்திருப்பது, பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post