பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. அதன் சாராம்சத்தை பின்வருமாறு காண்போம்.
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி பட்டா நிலத்தை மயானமாகப் பயன்படுத்த முடியாது. மேலும், மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வானது தீர்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது.
நடந்தது என்ன?…
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர், உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது கிராமத்தில், இறந்தவர்களின் உடலை எரிக்கவும், அடக்கம் செய்யவும் தனியாக மயானம் உள்ளது. ஆனால் எங்களது கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்மணி, இறந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பட்டா நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுத்து, மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நட வடிக்கையை மாவட்ட நிர்வாகம் குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும். இதற்கான செலவுத்தொகையை ஜெகதீஸ்வரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
பட்டா நிலத்தில் பிணத்தை புதைக்க முடியுமா? முடியாதா?
இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஸ்வரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் அடக்கம் செய்ய முடியுமா? முடியாதா? என்பது குறித்த இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி உத்தரவுப்படி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஜெயச்சந்திரன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பஞ்சாயத்து சட்ட ரீதியாக மயானம் என ஒதுக்கப்பட்ட அல்லது, அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். பட்டா நிலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது. எனவே, சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட மனுதாரரின் கணவரின் உடலைத் தோண்டியெடுத்து மயானத்தில் புதைக்க வேண்டும். பொது சுகாதாரத்துக்கு எதிராக, விதிகளை மீறி பட்டா நிலங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்திருந்தால் அதை மாற்றுவதற்கான செலவுத் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
Discussion about this post