அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும், போதிய வசதிகளும் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய இந்த மருத்துவமனை மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்க காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை வசதிகள் என எதுவுமே இல்லாமல் கடமைக்கு மருத்துவமனை என்ற பெயரில் செயல்படுகிறது இந்தக் கட்டிடம்.
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் சூனாம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம புறங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் இந்த சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர், நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட எந்தவொரு வசதிகளும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பிரவசத்திற்காக வரும் கர்பிணி பெண்களை, போதிய மருத்துவர்கள் இல்லையென்று கூறி அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவசர காலத்தில் தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்லும் நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்படுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு பிரசவ வலியுடன் வந்த பெண் ஒருவருக்கு மூன்று செவிலியர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் கால் முதலில் வெளியே வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ந்த செவிலியர்கள் மருத்துவருக்கு வீடியோ கால் மூலம் அழைத்து நிலைமையை உணர்த்தியுள்ளனர். வீடியோ காலில் பிரசவ வலியில் இருந்த பெண்ணின் நிலையைக் கண்ட மருத்துவர், தான் சொல்வதை செய்யுமாறு செவிலியர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால், எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை வெளியே வரவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கூட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இத்தனை புகார்களுக்கு பின்னரும் சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரோ, செவிலியர்களோ முறையாக பணிக்கு வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் முறையான சிகிச்சை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.