இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைத்து சிறப்பு – சிலை குறித்தான சில தகவல்கள்

இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளது இந்திய அரசு. அந்த சிலை குறித்த சில தகவல்களை பார்க்கலாம்…

குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே உள்ள ‘சாதுபெட்’ என்ற தீவுப் பகுதியில், சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில், அதாவது 597 அடியில் மிக பிரமாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. பீடம் உள்பட சிலையின் மொத்த உயரம் 787 அடியாகும்.

சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று கடந்த 2010 அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2015 அக்டோபர் 31ஆம் தேதி சிலையின் கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

ராம் சூடர் என்பவர் வடிவமைத்துள்ள சிலையை, ஜோசப் மெனா என்ற கட்டடக் கலைஞர் கட்டமைத்துள்ளார்.

இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல், முழு சிலையும் இரும்பில் அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்காக நாடு முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரம் டன் இரும்பு சேகரிக்கப்பட்டது. பிரபல கட்டுமான நிறுவனமான எஸ் & டி நிறுவனம், 2,990 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சிலையை கட்டமைத்துள்ளது.

எஃகு ஃப்ரேமிங், வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் மற்றும் வெண்கல உறைப்பூச்சுடன் சிலை கட்டப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள வளாகத்தில் நினைவுச்சின்னம், பார்வையாளர் மைய கட்டடம், நினைவுத் தோட்டம், உணவகம், மாநாட்டு மையம், கேளிக்கை பூங்கா, ஆராய்ச்சி நிலையம் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றை இணைக்கும் ஒரு சிறிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.

ஆற்றின் படுகையில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைந்துள்ளது. 200 பேர் ஒரே நேரத்தில் அங்கிருந்து சாத்புரா மற்றும் விந்திய மலைத்தொடர்களைப் பார்த்து ரசிக்கும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது.

`ஒருமைப்பாட்டுச் சிலை’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை தான், உலகிலேயே உயரமானது என சிறப்பை பெற்றுள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர தேவி சிலையை போன்று இரு மடங்கும், பிரேசிலில் உள்ள இயேசு சிலையை விட ஐந்து மடக்கும் உயரமானது.

3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிலையை, வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதியான இன்று, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Exit mobile version