உள்நாட்டு விமான சேவை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் இருப்பின், உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் அனைத்து விமான பயணிகளும், TN e-pass வலைதளத்தில் பதிவு செய்து கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ள 8 விதிமுறைகளில், ஒன்றை கூட பின்பற்றவில்லையெனில் சம்பந்தப்பட்ட பயணி தமிழகத்துக்குள் வர அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக முத்திரையிடப்படும் என்றும், விமான நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு செல்லும் பயணிகள் சொந்த கார்களையோ அல்லது வாடகை கார்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது கட்டாயம் இ-பாஸை காண்பிக்க வேண்டும் எனவும், இ-பாஸ் இல்லாதவர்கள் வெளியே செல்ல அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் இருந்து பயணிகள் வெளியேறும் நுழைவுவாயில்களில், மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகளை அழைத்து செல்ல விமான நிலையத்துக்கு வரும் கார்களில், ஓட்டுநரை தவிர்த்து ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post