பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மக்களவை பிற்பகல் வரையும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
ரபேல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மேகேதாட்டு விவகாரங்களை எழுப்பி மக்களவையில் எதிர்க்கட்சியினர் உறுப்பினர்கள் முழக்கத்தில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
உறுப்பினர்களை சமாதானப்படுத்தி அவை நடவடிக்கையை தொடர சபாநாயகர் முயன்றார். அந்த முயற்சி தோல்வி அடைந்ததையடுத்து மக்களவையை பிற்பகல் 2 மணி வரை அவர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மாநிலங்களவை துவங்கியதும், அதே கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினகள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களைவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.