சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பல பூங்காக்கள் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் பயனின்றி கிடக்கிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பல பூங்காக்களின் இன்றைய நிலை இது தான்… பொதுமக்கள், சிறுவர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது… சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இதில் முக்கிய பூங்காவாக சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள மே தின பூங்கா கருதப்படுகிறது. பதினான்கரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில், பராமரிப்பு பணி என்பது எள்ளளவும் நடைபெறுவதில்லை.
இதனால் புதர் மண்டிக் காட்சியளிக்கும் இந்தப் பூங்காவில் இரவு நேரத்தில் சமூகவிரோதிகள் புகுந்து மது, போதைப் பொருள்களை பயன்படுத்தும் கூடாரமாக மாற்றி வைத்துள்ளனர். மது போதையில் அங்கேயே படுத்து உறங்கும் சில குடிமகன்களால் காலையில் வாக்கிங் வரும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் விடியா ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பூங்காவுக்கு வருவோர் ஆங்காங்கே திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. செயற்கை நீர்வீழ்ச்சி போதிய பராமரிப்பின்றி தண்ணீர் இல்லாததால் கடந்த ஆறு மாதங்களாக வறண்டு போய் காட்சியளிக்கிறது.
சூளைமேட்டில் உள்ள கில் நகர் பூங்காவுக்கும் இதே நிலைமை தான். பல மாதங்களாக பூங்கா பூட்டியே கிடப்பதால் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கேட்டால் வேலை நடக்கிறது எனக் காரணம் சொல்கின்றனர் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதிமுக காலத்தில் மாநகராட்சிக்கு தனி நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், விடியா ஆட்சி அமைந்த நாள் முதலே, அனைத்துப் பூங்காக்களும் பராமரிப்பின்றி மூடிய நிலையிலேயே உள்ளது. இந்நிலை எப்போது மாறுமோ என பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.