பன்னீர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பன்னீர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
பன்னீர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை, மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, பன்னீர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். அதிகார வரம்பே இல்லாத சிவகங்கை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியதன் மூலம், உயர்நீதிமன்ற கிளையும் தவறிழைத்துள்ளது, என குறிப்பிட்ட நீதிபதி, விசாரணை நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாகவும், சட்டங்கள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு பொருந்தாது என்று அறிவித்துவிடுவது போன்று உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். இதுபோன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால் புற்றுநோய் போல இந்த சமுதாயத்தை சிதைத்து விடும் என குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போது மறு ஆய்வு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பன்னீருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.