பாண்டி பஜாரில் உள்ள ஹாட்சிப்ஸ் உணவகத்தில் தயிர்பூரியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஹாட்சிப்ஸ் உணவகத்தில் கொரட்டூரை சேர்ந்த ஜான், சினேகா, திவ்யா ஆகியோர் பேல்பூரி, பாவ்பாஜி, தயிர்பூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, திவ்யா சாப்பிட்ட தயிர்பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், உணவக நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
உணவகத்தினரோ பெரிதாக எந்த ரியாக் ஷனும் காட்டாமல், வழக்கம்போல தெரியாமல் நடந்து விட்டது. இதனை பெரிதுபடுத்தாதீர்கள் என்று சமாதானம் செய்துள்ளனர்.
இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, திவ்யாவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி எடுக்கவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை உதவி எண்ணிற்கு போன் செய்து திவ்யா புகார் அளித்த நிலையில், ஹாட் சிப்ஸ் உணவகத்தின் சமையலறையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திவ்யா சாப்பிட்ட தயிர்பூரியில் கிடந்தது கரப்பான் பூச்சி இலை எனவும் மின்விளக்கு ஒளியில் வரும் ஈசல்தான் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது, சமையலறை பகுதி தூய்மையாகப் பராமரிக்கப்படாமலும், சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கப்படாததையும் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காததால் குறைபாடுகளைச் சரிசெய்ய உத்தரவிட்டு ஹாட்சிப்ஸ் உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– செய்தியாளர் ராம்குமார் மற்றும் ஆசாத்.
Discussion about this post