நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் மரணம் அவரது கிராமத்தையே உலுக்கியுள்ளது. கடந்த 13ம் தேதி புதுமனை புகுவிழா நடத்திய மகிழ்ச்சி அடங்குவதற்குளாகவே, பழனியின் குடும்பம் மீளா துயரில் மூழ்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனூர் அருகேயுள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பழனி…. தன்னுடைய 18 வயதில் ராணுவத்தில் சேர்ந்த அவர், 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி ஹவில்தாராக உயர்ந்தார்.
கடந்த 2008ம் ஆண்டு வானதி தேவியை என்பவரை கரம்பிடித்த பழனிக்கு, 10 வயதில் பிரசன்னா என்ற மகனும், 8 வயதில் திவ்யா என்ற மகளும் உள்ளனர்… கடந்த 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கலுவூரணி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடந்தது… நாட்டைக் காக்கும் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பழனி, புதுமனை புகுவிழாவில் பங்கேற்க வரவில்லை…
புதுமனை புகுவிழாவிற்கு எப்படியும் வந்து விடுவேன் என தனது குடுமபத்தாரிடம் உறுதிமொழி அளித்திருந்த ராணுவ ஹவில்தார் பழனிக்கு, லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக விடுப்பு கிடைக்கவில்லை…. குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்காத வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், தனது குடும்பத்தாரை ஆறுதல் கூறி தேற்றி இருந்தார் பழனி…
இன்னும் சில தினங்களில் ஊர் திரும்புவதாக தொலைபேசியில் பழனி தெரிவித்திருந்த நிலையில், அவரது மரணச் செய்தி குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் கால் வைக்க கூடிய வாய்ப்பு இல்லாமல் அவரது வாழ்வு அஸ்தமனம் ஆகியிருப்பது, குடும்பத்தினரை மட்டுமின்றி, கடுக்கலூர் கிராமத்தினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஜூன் மூன்றாம் தேதி பிறந்த பழனி… ஜூன் மாதம் ஆறாம் தேதி வானதி தேவியை திருமணம் செய்து கொண்டார்… ஜூன் 13ம் தேதி புதுமனை புகுவிழா நடத்திய பழனி…. ஜூன் 16ம் தேதி வீரமரணம் அடைந்தார்… நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர் பழனியின் வாழ்வு ஜூன் மாதத்துடன் பின்னி பிணைந்து நீங்கா நினைவாகவே மாறி விட்டது.
Discussion about this post