பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கைது செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது, ராணுவம் குறித்து அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றம் உத்தரவிட்டும், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து இம்ரான் கான் கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வந்தடைந்த இம்ரான் கான், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் கைதை தடுக்க வந்த அவரது வழக்கறிஞர், ரேஞ்சர்ஸ் படையினர் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தொண்டர்கள் வீதிகளில் திரண்டுள்ளதால் பாகிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவுகிறது.