தங்களின் கோரிக்கையை ஏற்று 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ள தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கோபி செட்டிபாளையம் அருகிலுள்ள கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி – அரக்கன் கோட்டை பகுதிகள் பவானி சாகர் அணையால் பாசன வசதி பெறுகின்றன. போதிய நீர் இருப்பின் காரணமாக, இந்த ஆண்டு பவானி அணையின் பாசனப் பகுதிகளில் இரண்டாவது போகமாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தடப்பள்ளி – அரக்கன் கோட்டை பாசனப் பகுதியில் சுமார் 24 ஆயிரத்து 504 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஏளூர், கள்ளிப்பட்டி, கூகலூர் உள்ளிட்ட 11 இடங்களில் தமிழக அரசினால் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் நெல்லை இடைத்தரகர்கள் இல்லாமல் அதிக விலைக்கு விற்க முடிவதாக தெரிவித்தனர்.