செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி உட்பட 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோயாளி உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நோயாளிகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய ஆட்சியர், மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன், மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், உயிரிழந்த 13 பேரில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்ததாகக் கூறினார். நோயாளிகள் ஆச்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை எனவும், இணைநோய் பாதிப்பு, வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக ஆட்சியர் விளக்கம் அளித்தார். மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாகவும் ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறினார்.
Discussion about this post