வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை: அருண் ஜெட்லி

வாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் தேங்கியுள்ள வாராக்கடன் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், வங்கி அதிகாரிகள் தங்கள் கடமை தவறியதன் மூலம் வாராக்கடன் உயர்வுக்கு காரணமாக இருந்ததாக, கடந்த 2017-18ம் நிதியாண்டில் 6,049 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வாராக்கடன் தொகை அடிப்படையில் அவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை முதல் சி.பி.ஐ.யில் புகார் வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியிருந்த அருண் ஜெட்லி, பணி நீக்கம், கட்டாய ஓய்வு மற்றும் பதவி இறக்கம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version