பெண்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே சரியானவர்கள் என்ற காலத்தை கடந்து, இன்று மயானத்திலும் பணிபுரியும் தைரியம் பெற்றுவிட்டார்கள்… ஓட்டேரி மயானத்தில் பணிபுரியும் சாதனைப் பெண் எஸ்தர் சாந்தி பற்றி விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
பெண்கள் என்றாலே மென்மையானவர்கள், பயந்தவர்கள், உடல் அமைப்பால் பலவீனமானவர்கள், கணவனுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற பேச்செல்லாம் இன்றும் சில பழமைவாத கும்பல்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இந்த 21-ம் நூற்றாண்டில் இந்த வாதங்கள் எடுபடாது என்பதுதான் உண்மை. நாட்டின் பிரதமராக மட்டுமல்ல, சுடுகாட்டிலும் கூட பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அரிச்சந்திரன் காலத்தில் இருந்து சுடுகாட்டில் ஆண்கள் தான் பணிபுரிகிறார்கள் என்ற எண்ணம் தோன்றினால், கட்டாயம் உங்கள் எண்ணத்தில் பிழை என்றுதான் கூற வேண்டும். ஆம் எஸ்தர் சாந்தி, என்பவர், மயானம் என்பது பெண்களும் பணிபுரியும் இடம் என நிரூபித்து விட்டார்.
அவுட்லுக், பெட்டர் இன்டியா, இன்டியா டைம்ஸ் போன்ற முன்னணி பத்திரிகைகளில் இடம்பெற்ற சாதனைப் பெண் எஸ்தர் சாந்தி தலைநகர் சென்னையில் இருக்கும், வடபழனியை சேர்ந்தவர். பெண்களுக்கென்று இருக்கும் அனைத்து சமுதாய கட்டுதிட்டுகளும் எஸ்தர் சாந்திக்கும் தடைக்கல்லாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் தனது இடது கையில் தள்ளிவிட்டு, 2012ம் ஆண்டில் அண்ணா நகரில் உள்ள வேலங்காடு மயானத்தில் பணிக்கு சேர்ந்தார். மயானத்தில் வேலை செய்வதால் பேய், பூதம், பற்றியெல்லாம் இவருக்கு பயமில்லை. துணிச்சலாக இறந்தவர்களின் உடலை இறுதிச் சடங்கு செய்து எரியூட்டும் பணியில் இறங்கிவிடுவார். ஒரு காலத்தில் ஓட்டேரி மயானம் ரவுடிகள், மதுப்பிரியர்களின் அட்டகாசங்கள் நிறைந்து இருந்தது. ஆனால் எஸ்தர் சாந்தியின் வருகைக்கு மயானம் அவர் கட்டுபாட்டில் இருந்து வருகின்றது.
ஒரு காலத்தில் பல சோதனைகளை சந்தித்தவர் தற்போது சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்து தலைநிமிர்ந்து நிற்கின்றார். கொரோன காலங்களில் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்து, வீட்டு கதவுகளின் பின்னால் முடங்கிப்போனது. ஆனால் எஸ்தர் சாந்தி கொரோனா பாதித்து உயிரிழந்த உடல்களை எரியூட்டிக் கொண்டிருந்தார். பெண்கள் மென்மையானவர்கள் என்ற காரணத்தை கூறி பல நூற்றாண்டு காலம் பல வேலைகளில் புறக்கணிக்கப்பட்டார்கள். தற்காலத்தில் எஸ்தர் சாந்தி போன்ற பெண்கள் துருப்பிடித்த அந்த வாதங்களை உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.