ஆஸ்கர் விருது பெற்ற யானை பராமரிப்பு பெண் பெள்ளியை அவர் வளர்த்த குட்டியானையையே பார்க்க அனுமதிக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். ஆஸ்கர் பெண்மணிக்கு என்ன சோகம்? செய்திக் கட்டுரையில் பார்க்கலாம்.
நீலகிரி மாவட்டம் முதுமலையை சேர்ந்த பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் வளர்த்த குட்டியானை பொம்மி குறித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை வென்றது. இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. ஆஸ்கரை வென்ற போதும், தான் வளர்த்த குட்டிபொம்மியை பார்க்க வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை வேதனை தெரிவித்துள்ளார் பெள்ளி. மேலும், தனக்கு குட்டி யானைகளை வளர்க்க குறைந்த ஊதியமாக 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதனால் வரும் நாட்களில் குட்டி யானைகளை வளர்க்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில், கிணத்திலிருந்து மீட்கப்பட்ட குட்டி யானை ஒன்றினை பெள்ளி தம்பதியிடம் வனத்துறை அதிகாரிகள் பராமரிக்க கூறியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த குட்டியானை உடல்நலக்குறைவால் இறந்துள்ளது. இதுகுறித்து பேசிய பெள்ளி,குட்டியானையை பராமரியுங்கள் என்று பெயரளவுக்கு தங்களைச் சொன்னதாகவும், ஆனால் உடன் இருந்தே பார்க்கும் வகையில் தங்குமிடம் கூட அமைத்து தரவில்லை என்று குற்றம் சாட்டினார்.
போதிய தங்கும் வசதிகள் செய்து கொடுத்திருந்தால் குட்டி யானைக்கு உரிய முறையில், உணவளித்து அதனை முறையாக வளர்த்திருக்கலாம் என்பது பெள்ளி அம்மாளின் ஏக்கமாக உள்ளது.
கடந்த மாதம் இவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து பாராட்டிய விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் இவர்களின் குறைகளை கேட்டறிந்தாரா என்பதும் தெரியவில்லை. ஆஸ்கருக்குப் பிறகு எல்லோரும் இந்த தம்பதியைப் பாராட்டுவதால், வனத்துறைக்கு அது பிடிக்கவில்லையோ என்கிறார்கள் ஆஸ்கரின் தம்பதியை அருகில் இருந்து பார்ப்பவர்கள். அவர்கள் வளர்த்த யானைக் குட்டியையாவது பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பதும் அவர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
– செய்தியாளர் ஆனந்த்குமார் மற்றும் ஆசாத்.