பெகாசஸ் விவகாரத்தில், 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம், முக்கிய தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானதால், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெகாசஸ் விவகாரம் பொது விவாதத்திற்கு உட்பட்டதல்ல என்றும், தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால், இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பை சமரசம் செய்யும் எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடுவதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post