இதுதானா உங்க தர்மயுத்தம்..பன்னீரைப் பார்த்து கேட்கும் பொதுமக்கள்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 1972 ஆம் ஆண்டு  மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். அவர் வழிவந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் இந்திய அரசியலிலே தவிர்க்க முடியாத கட்சியாக அதிமுகவினைக் கொண்டு சென்றார். அப்படிப்பட்ட கட்சிக்கு நன்மை பயக்காவிட்டாலும் பரவாயில்லை, துரோகம் செய்வதற்கு பன்னீருக்கு எப்படி மனம் வந்தது என்று கழகத்தின் ஒன்றரை கோடித் தொண்டர்களும் உள்ளக் குமுறலுடன் கேள்வியெழுப்பி வந்தனர்.

அம்மாவின் விசுவாசி என்று வெளியிடங்களில் தன்னைக் காட்டிக்கொள்ளும் பன்னீர், அதற்கு மாறாக சில காரியங்களில் ஈடுபட்டு வந்தார் மற்றும் வருகிறார். குறிப்பாக அதிமுக கழகத்தினரின் கோவிலாக இருக்கும் எம்ஜிஆர் மாளிகையை அடித்து நொறுக்கியது அனைவரின் மனதிலும் ஆறா வடுவாக பதிந்துவிட்டது. அதிமுகவின் உண்மையான தொண்டனாக இருப்பவர் யாரும் இத்தகைய செயலை செய்யமாட்டார்கள். மேலும் அம்மாவின் விசுவாசி என்று தன்னைக் காட்டிகொள்ளும் ஒருவர் இப்படி செய்திருப்பது தொண்டர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. இவரையா நாம் ஒருங்கிணைப்பாளராக ஏற்றோம், இவருக்கா நாம் ஆதரவுக் கரங்கள் நீட்டினோம் என்று சிந்திக்கத் தொடங்கினர்.

தீய சக்தி திமுக என்று புரட்சித் தலைவராலும் புரட்சித் தலைவியாலும் நிராகரிக்கப்பட்டு, திமுகவினை எதிர்ப்பதை நோக்கமாக வைத்துள்ள ஒரு கழகத்தின் கடை கோடி தொண்டன் கூட செய்ய முயலாத காரியத்தை பன்னீர் செய்திருக்கிறார். குறிப்பாக, சட்டசபையில் கருணாநிதிக்கு வைக்கப் போகும் பேனா சிலைக்கு ஆதரவு கொடுப்பது, கருணாநிதியின் புகைப்படத்தை வீட்டில் வைத்திருக்கிறேன் என்று சொன்னது, திராவிட மாப்பிள்ளை சபரீசனை சந்தித்து பேசி உறவாடியது போன்ற செயல்களில் ஈடுபட்டு கழகத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தினார்.

தற்போது டிடிவி தினகரனுடன் சேர்ந்து ஒன்றாக செயல்படப் போகிறேன் என்று சொல்கிறார். சசிகலாவை கடுமையான வார்த்தைகளில் வசைபாடியவர்தான் பன்னீர். ஆனால் தற்போது அவர்களிடமே சென்று ஐக்கியம் ஆகியிருப்பது எந்தவிதத்தில் சரி என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்புகின்றனர். சசிகலாவை எதிர்த்து அம்மாவின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தது நடிப்புதானா? தர்மயுத்தம் என்று சொன்னது டிடிவியுடன் சென்று இணைந்து கொள்வதற்காகத்தானா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்புகின்றனர்,.

Exit mobile version