மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பல கோடி வாக்காளர்கள் தங்கள் பொன்னான வாக்குகளை வழங்கியதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
குறிப்பாக சோளிங்கர் உட்பட 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் அளித்த மகத்தான வெற்றி காரணமாக ஜெயலலிதா அமைத்த நல்லரசு நிலை பெற்றிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர்கள், தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளனர்.
அதிமுகவுக்கு துரோகம் செய்தோரை புறந்தள்ளி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்ற உண்மையான மக்கள் இயக்கம் அதிமுக தான் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்திருப்பதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக அரசையும், அதிமுகவையும் கட்டிக் காத்திருக்கும் வாக்காளர்களுக்கும் நேரடியாக நன்றி கூற வேண்டியது அதிமுகவினரின் இன்றியமையாத கடமை என தெரிவித்திருக்கும் அவர்கள், ஜூன் முதல் வாரம் தொடங்கி வாக்காளப் பெருமக்களுக்கு நேரடி சந்திப்பு மற்றும் பொதுகூட்டங்கள் வாயிலாக அதிமுகவினர் நன்றி தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post