எதிர்க்கட்சித் தலைவரும் கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மீது பொய்யாக அவதூறினை சித்தரித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கி மினி பேருந்து மூலம் விமான நிலையத்தின் நுழைவு வாயிலுக்கு வந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மீது தன்னை தாக்கியதாக அபாண்டமாக குற்றச்சாட்டினை ராஜேஸ்வரன் என்கிற நபர் கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் வருகை புரிந்த பாதுகாப்பு அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேருந்தில் அமைதியாக நின்றபடி வர, அவர் தன்னை நோக்கி முணுமுணுத்தார் என்று பொய்யாக கூறிவருகிறார் அந்நபர். முணுமுணுத்ததால்தான் கோஷமிட்டேன் என்று கூறிவருகிறார். ஆனால் தன்னிச்சையாக அந்த நபர் உள்நோக்கம் கொண்டுதான் முழக்கமிட்டிருக்கிறார். மேலும் அந்த நபர் இபிகோ சட்டம் 392 படி வழிப்பறி வழக்கு தொடுத்திருக்கிறார். இது மிகவும் வேடிக்கையானதாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை தாக்குவது போல முன்வந்தும் தன்னுடைய செல்போனில் அவரைக் குறித்து தவறாக பேசி நேரலை வீடியோ ஒன்றினை எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாவலர் அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளார். பாதுகாவலர் என்பதனை இங்கு சரியாக புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட பாதுகாவலர் இல்லை அவர். அரசாங்கமே எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்புக் கருதி நியமிக்கப்பட்ட காவலர் அவர். சட்டமும் எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பிற்கு ஒரு காவலரை நியமிக்கச் சொல்கிறது.
மேலும் சிஆர்பிசி சட்டம் 151ன் படி ஒரு நபர் தாக்கப்போவதனை முன்கூட்டியே காவலர் ஒருவர் அறிந்தால் தற்காப்பிற்காக எதிராளியைத் தாக்கலாம். இங்கு ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, ஆளுங்கட்சியாளர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் இடத்தில் உள்ள ஒருவராக, மக்களின் பிரதிநிதியாக உள்ள் ஒரு தலைவரை மர்மநபர் ஒருவர் தாக்க முயற்சித்தல் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுவதனை அறிந்த பாதுகாவலர் எதிர்க்கட்சித் தலைவரை தற்காத்து அந்நபரின் செல்போனைப் பறிமுதல் செய்திருப்பது எந்த வகையிலும் குற்றமில்லை.
இபிகோ 323 சட்டப்படி தானாக முன்வந்து தாக்கியிருக்கிறார் என்ற வழக்குத் தொடுத்துள்ளார் அந்நபர். ஆனால் அவர் கோஷமிட்டு தூண்டியுள்ளதை இதில் குறிப்பிடவில்லை. அந்நபரின் தூண்டுதலின் பெயரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதை மறைத்து ஜோடித்திருப்பது எந்த வகையில் சரியாக இருக்கும். மேலும் குற்றம் செய்த நபரை விட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றம் புரிந்தவரையே வழக்குத் தொடுக்க செய்திருப்பது காவல்துறையின் பிற்போக்கான நிலையாக கருதப்படுகிறது. மேலும் இதுபோலான சம்பவம் ஒன்று மாநிலத்தின் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒருநபர் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் மதுரையின் மாநகர காவல் ஆணையர் இதற்காக எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. அந்த மர்ம நபர் போதையில் உள்ளதாக சொல்லி காவல்துறை அவரை விட்டுள்ளது. போதையில் உள்ளவர் இவ்வளவு தெளிவாக ஒரு செயலை செய்யமுடியுமா என்றும் ஒரு கேள்வி எழுகிறது. காவல்துறை அந்நபரின் இரத்தத்தில் எத்தனை அளவிற்கு ஆல்கஹால் கலந்திருக்கிறது என்று பரிசோதிக்கவும் தவறியிருக்கிறது.
இவ்வாய்வுகளின் படியே இந்த வழக்கானது எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணியத்திற்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் பொருட்டு தொடரப்பட்ட பொய்வழக்கு என்ற முடிவுக்கு வர முடிகிறது.