மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையிலிருந்து 16 போக்கி வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதியிலுள்ள மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து முதல் கட்டமாக 2 ஆயிரம் கனஅடி உபரி நீர், 16 போக்கி வழியாக டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
இதனை மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை ஆகியோர் பூஜைகள் செய்யப்பட்ட பின் திறந்து வைத்தனர். ஓராண்டிற்குப் பிறகு உபரி நீர் போக்கிலிருந்து திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், 16 கண் பாலம் பகுதியில் கூடியிருந்து தண்ணீர் வெளியேறுவதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியிலுள்ள மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.