கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.02 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சத்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதே நேரம், கபினியின் துணை அணையான தாரகாவில் இருந்து, 12 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 421 கனஅடியும் திறக்கப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 1 லட்சம் கன அடியை எட்டியுள்ளதால் மேட்டூர் அணை ஒரு வாரத்தில் நிரம்பும் சூழல் உருவாகியுள்ளது. மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடியாகும். அதாவது 93.47 டிஎம்சி. தற்போது நீர் இருப்பு 20 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து 1 லட்சம் கன அடி என்ற அளவில் தொடர்ந்து சில நாட்களுக்கு வந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version